Thursday, February 23, 2012

அன்றும் இன்றும் என்றும் – யாழ் மண்ணில் பெண்கள்



காலம் காலமாக போற்றிக் கடைப் பிடித்து வந்த இறுக்கமான எமது கலாசாரப் பண்பாட்டுப் படிமங்கள் உடைக்கப்பட்டு, எமது கலாச்சாரத்தை மீளுருவாக்கம் செய்யும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. மாறி வரும் உலகின் விரைவான மாற்றங்களை உள்வாங்கி புதிய சமூகப் புரள்வுகளை வாழ்வின் ஆதாரங்களாகக் கொண்டு பழையவற்றிலிருந்து விடுபடுவதற்கு பெண்கள் சமூகமே பல நியாயங்களை ஏற்படுத்தியுள்ளன. பெண்கள் எமது நாட்டில் தொடர்ந்தும் அடக்கப்பட்டு சுரண்டப்படும் சமூகமாகவே இருந்து வந்துள்ளனர்.
அன்றைய பெண்கள் தமது குடுமபங்கட்குள்ளேயே தாழ்த்தப்பட்டுள்ள நிலையில் வாழ்ந்ததோடு  ஆண்கள் சகல மட்டத்திலும் உயர்ந்தவர்கள் என்ற கருத்தோட்டம் வாழ்வியலில் உயிர் நாடியாக விளங்கியது. கூட்டுக் குடும்ப முறையின் பின்னணியில் ஆண் கட்டுப்பாடற்ற குடும்பத் தலைவனாகவே தன்னைச் சித்தரித்துக் கொண்டான். பெண்களே சமயம், கலாசாரம், குடும்பக் கடமைகள் என்பவற்றை இறுக்கமாகப் பேணுபவர்கள் என்ற எண்ணக் கரு அன்றைய யாழ் பெண்களிடம் நிரம்பவே வேரூன்றி இருந்தது. கோவில்க் கொண்டாட்டங்கள், சடங்குகளில் பெண்களின் ஈடுபாடுகள் இவற்றை முக்கியப்படுத்தும் சான்றுகளாக அமைகின்றன.
கலாசாரத்தின் சின்னங்களாக விளங்கும் ஆடைகளின் மாற்றம் கூட நாகரிகமான கல்வியறிவு பெற்ற இல்லத்தரசிகளின் மத்தியில் புதிய பரிமாணத்தோற்றத்தைப் புகுத்தியது. பூட்டியம்மா உடுத்த உடையை அம்மம்மா உடுத்ததில்லை. அம்மம்மா உடுத்தது போல் அம்மா உடுக்கவில்லை. அம்மா போல அக்கா உடுத்ததில்லை இவற்றுள் எது என்னுடைய ஆடை? எது என் கலாசாரம்? இம் மாற்ற கலாசாரத்திற்கான தேடல் இன்று எம்முன் கேள்விக் குறியாகி முரண்பாடான வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது. இவ் வாதங்களை நிலை நிறுத்துவதில் முனைப்புப் பெறுகின்ற ஒரு வாதமே பெண்ணிலை வாதாம் என்கின்ற பெண்களின் சமத்துவத்திற்கு வலுவூட்டும் கோட்பாடு எனினும் சமத்துவத்திற்கான போராட்டம் முன்னெடுக்கப்படும் போது சமூகத்தின் அடித்தளத்தில் காணப்படும் அடிப்படையான பிரச்சினைகட்கு தீர்வு எட்டப்படுவதில்லை. ஆகவே பெண்கள் முன்னேற்றத்தின் பாதைகட்கு எதிராகப் போராடுவது என்ற நிலையை  மீறி சமூக மாற்றத்தை வலுப்படுத்தல் என்ற கருத்தைக் கொண்டதாக அமைதலே ஏற்புடையதாகும்.
இலங்கையின் தமிழர் செறிந்து வாழ் பிரதேசமாக யாழ்ப்பாணப் பிரதேசம் அமைந்துள்ளது. மிக நீண்ட தமிழர் பாரம்பரியத்தைக் கொண்ட இந்து மரபுரிமையினை தமது கலாசார உரிமையாகக் கொண்டவர்கள் இந்து நாகரிகத்தின் அடித்தளத்தோடு இணைந்துள்ளது தான் இம் மரபு. இம் மரபு யாழ்ப்பாணப் பெண்களை சமூகத்தலத்தின் நாகரிகத்தின் உயாந்த நிலையிலேயே வைத்துள்ளது. நாகரிகத்தின் அளவு கோலாக சமூகத்தின் படிமுறை வளர்ச்சியைக் காட்டும் வழிகாட்டியாக கல்வி அமைந்திருந்த போதிலும், யாழ்ப்பாண அன்றைய பெண்களின் கல்வி நிலை, அல்லது அறிவு மட்டம் எந்த வகையிலும் குறைவாக மதிப்பிடப்படவில்லை. அக்காலக் கல்வி சமயம், இலக்கியம் என்ற இரு பரப்பெல்லைக்குள்ளும் பெண்களை வரையறுத்து வைத்திருந்ததென்பது உண்மையே. ஆயினும் அன்னிய நாட்டவரின் தாக்கங்களினால் பல வித சடங்குகளும், சம்பிரதாயங்களும் இடைநிலையில் சேர்க்கப்பட்டு வாழ்வியல் முறைகளில் இறுக்கமான அடக்குமுறைகள் புகுத்தப்பட்டதனால் பெண்கள் சமூக மட்த்தில் அடக்குமுறைகட்கு உள்ளாக்கப்பட்டு்ள்ளனர். ஏட்டுக் கல்வி என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் கிடையாத நிலையிலிருந்து பாரம்பரிய தொழில் ஆக்க நுட்பங்கள் சிறந் சமூக சிந்தனையாளர்களை உருவாக்கியிருந்தது. இதன் தொடர்பாக பாரம்பரிய வைத்தியம், சோதிடம் என்பன வழர்ச்சியடைந்து அக்குடும்பந்தைச் சார்ந்த பெண்களும் ஓர் சமூகத் தலைமைத்துவத்தை வழங்கியிருந்தது. வீடுகளிலும், திண்னைகளிலும் வாழந்த பெண்கள் பள்ளிக்கூடங்களிலும் கல்வியினைப் பெற்றார்களா என்பதற்கு சான்றுகள் குறைவாகவே இருந்த போதிலும் கேள்வி ஞானத்தில் அவர்கள் மேலோங்கி இருந்ததற்கான ஆதாரங்கள் சமய தலங்களில் அவர்கள் காட்டிய ஆர்வம், விருந்தோம்பல் முறைகளிலிருந்து அறிய முடிகின்றது.
பெண் கல்வியின் ஆரம்பம் மேலைத்தேச அறிவியல் வளர்ச்சியோடு ஆரம்பமாகி எமது பிரதேசத்திற்கும் புதிய பரிமாண வடிவத்தைக் கொடுத்தது. போர்த்துக் கேயரின் வருகையேர்ட ஏற்பட்ட சிந்தனைப் புரட்சியும், சிந்தனை மாற்றங்களும் பெண்களுக்கு கல்வி மற்றும் எழுத்தறிவும் அவசியம் என்பதை உணர்த்தியது. இக் கால கட்டத்தோடு ஏற்பட்ட எழுச்சியானது மரபு நிலைக்கும் நவீனத்துவத்திற்கும் இடையே நடைபெறப் போகும் மாற்றங்களின் சுட்டியாகக் காட்டப்பட்டது. போர்த்துக் கேயரின் வருகையோடு இடம்பெற்ற கட்டாய மதமாற்றத்தை தொடர்ந்து ஏற்பட்ட சமூக மாற்றங்கள் பெண்களை விழிப்பூட்டியது. அந்நியமான பழக்க வழக்கங்கள், மொழி, பாடசாலைகளின் நிறுவன மயப்பட்ட வருகை யாவும் யாழ்ப்பாணப் பெண்களிடையே புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்தியது. பெண்கள் தேவாலயங்களில் நடைபெறும் விழாக்களில் பங்குபற்றினர். சிறுமிகட்கு பாடசாலைகளில் ஆரம்ப கல்வி புகட்டப்பட்டது. பெண்களுக்குத் தேவாலயங்கிளல் மாலை நேல வகுப்புகள் நடைபெற்றன. ஆனால் பெண்களுக்கென்று தனிப்பட்ட பாடசாலைகள் நடைபெறவில்லை. இவ்வாறு ஏற்பட்ட மாற்றம் யாழ்ப்பாண சமூகத்தில் மிகப் பாரிய தாக்கத்தையும் சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தியது. இப் புதிய உணர்வுகள்  “புதுமைப் பெண்” என்ற உணர்வை பெண்கள் மத்தியில் தூண்டியது. அன்னிய மொழியறிவு, புதிய நாரீக உடைகள், பணம் படைத்த நடுத்தர வர்க்க ஆண்கள் யாவையுமே பெண்கள் வாழ்வியலில்  மாற்றத்தை ஏற்படுது்தியது. புதிதாக வீட்டை விட்டு புறப்படத் துணிந்த நடுது்தர வர்க்கப் பெண்கள் தமது தேசிய அடையாளத்தையும் தேசிய கலாசாரத்தையும்  விடவில்லை. அதேபோல ஏனைய பெண்களும் அதனை விட்டுவிடக் கூடாது என விரும்பினர் . இதனால் கலாசார சீரழிவு ஒன்று அப்போ இருக்கவில்லை. கல்விக்கான சந்தர்ப்பங்கள் விரிவுபடுத்தப்பட்டதனால் பெண்கள் உயர் கல்வி கற்கும் வாய்ப்புக்களும் ஏற்பட்டன. மத்தியதர வர்க்கத்தின்  எழுச்சி பெண்களும் மேற்குலகப் பெண்கள் போல் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்த போதிலும் யாழ்ப்பாண சமூகத்தின் ஆணாதிக்கச் சிந்தனைகள், சமூகப் பழக்கவழக்கங்களை தகர்த்தெறியும் போக்கிலிருந்து அவை நழுவி விட்டதாகவே அறிய முடிகின்றது.
ஆயினும் ஏற்பட்ட சமூக மாற்றம், பெண் கல்வி யாவும் எவ்வகையான மாற்றங்களை யாழ்ப்பாண சமூகத்தில் ஏற்படுத்தின என்ற விடயங்கள். பெளிப்படு்த்தப்படாத புதிராகவே உள்ளது.
தற்கால அல்லது இன்றைய பெண்கள் பற்றிய சமூக விழிப்புணர்வு ஓர் பாய்ச்சல் வேகத்தில் யாழ்ப்பாண சமூகத்தின் மரபுவழிகளை புறந்தள்ளும் போக்கை க் கொண்டதாக மாற்றமடைந்து வருகின்றது. கல்வியில் முன்னேற்றமடைந்து சாதனைகளைப் படைத்து வரும்  பெண்கள் தங்களுக்கெதிராக சமூகத்தில் நிலவும் தடைகள், ஆணாதிக்க சிந்தனைகளை எதிர்த்து போராடி வரும் பெண் விடுதலை இயக்கங்கள் சரசியல் சமூக ரீதியான மாற்று வழிகள் பெண்களுக்குத் தேவை எனக் குரல் பொடுக்கின்றனர். எது எப்படி இருந்த போதிலும் போராட்டங்களின் தாக்கங்கள் இன்றும் யாழ்ப்பாணப் பெண்களின் குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களின் நிலையில்  அதிக மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. யாழ்ப்பாணப் பெண்களின் திருமண வாழ்க்கை முறைகள் ரோமன் சட்டத்தின் அறிமுகத்தோடு சீர்படுத்தப்பட்ட போதிலும் சொத்துரிமை, சீதனம் போன்ற வழக்காற்று முறைகள் தற்போதும் பெண்களை தாக்கத்திற்குள்ளாக்குவாதாகவே உள்ளது. தந்தை வழிச் சமூக அமைப்பில் பெண் மீதான ஒடுக்கு முறை பல தளங்களில் செயற்படுகின்றது. இவை குடும்பம், மதம், கல்வி,கலை இலக்கியம் ஏன் அரசியலில் கூட தொடர்வதாகவுள்ளது. தற்காலப் பெண் தனக்குரிய ஒடுக்கு முறைளை களைய வேண்டின் அதற்கேற்ற அறிவையும் உற்பத்தி செய்து கொள் வேண்டியது இன்று மிக மிக அவசியமாகின்றது. எமது சமூகப் பிண்ணணியில் சீதனக் கொடுமை, பால் ஒடுக்குமுறை, ஆபாச எதிர்ப்பு, பொருளாதார ரீதியில் பாராபட்சம் என்பதோடு நின்று விடாது சமூகத்தின் பெண் ஒடுக்கு முறையில் ஆளமான வேர்களைத் தொட முயல வேண்டும். பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது. பாலுறவு ஒடுக்கு முறையே. போரின் கொடுமைகளோடு பாலியல் இம்சைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எம் பெண்களுக்கு ஏற்பட்ட மிக மோசமான சமூகப் பாதிப்பாகும். இக்ற பொருளாதார அரசியல் ரீதியில் பெண் விடுதலை பெற்றுள்ள பெண்கள் எப்போதும் விடுதலை பெற்றவர்களாக அல்லை. குடும்பமே இன்று பெண்கள் மீதான சகல ஒடுக்கு முறைகட்கும் மூலகாரணமாக இருந்து வருகின்றது. யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பில் இன்று குடும்பங்கள் சிதைந்து, சமூ உறவுகள் சிதைந்து பெண்கள், ஆண் துணையற்றவர்களாகவும், சிறுமிகள் பாதுகாப்பற்றவர்களாகவும் வாழ்கின்றனர். யாழ்ப்பாணத்தில் ஆதரவற்றவர்களாக வாழும் 40,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் தமது குடும்பங்களை தனியாகச் சுமப்பவர்களாகவே உள்ளனர். இவை மட்டுமல்ல திருமண வயதைக் கடந்தும் திருமணமாகாது தனித்து வாழும் பெண்கள் இள வயது திருமணங்கள் காரணமாகப் பிரிவுகள், பெண்களுக்கு உத்தரவாதமான தொழிலின்மை, தொழில் தருவதாக ஏமாற்றிக் கூட்டிச் செல்லும் முகவர்கள் இப்படியாக நீண்டு கொண்டே செல்லும் பெண்களின் அவலத்தை எமது குடும்ப முறைமைகளைச் சிதைத்துள்ளனர். இன்று சமூக வரையறைக்குள் நின்று சமூகப் பிரச்சினைகளைத் துருவி ஆராயும் போது பெண்கள் விடுதலையும், சமூகப் பிரச்சினைகளும் ஒன்றாகவே தெரிகின்றன. ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட வேண்டுமாயின் ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் பெண்களுக்கும் சமமாகப் பகிரப்பட வேண்டும். குடும்பத்தின் அடக்குமுறைகள் தளர்த்தப்பட வேண்டும். வீடடைப் பாதுகாத்தல், அன்பு செய்தல், திருமணம், குழந்தை பெறுதல், குடும்பத்தில் மகிழ்ச்சியானவை என சிறுவயது முதல் கற்பிபக்கப்பட்டு வந்துள்ளது. ஆ யினும் இவற்றையெல்லாம் பெண்கள் மகிழ்வானதாகக் கொள்வதில்லை. சகல மட்டத்திலும் விடுதலை என்பது அறிவு  பூர்வமான சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதனை எப்படிப் பெண்கள் பயன்படுத்துகின்றார்கள் என்பது தான் தற்போது பிரச்சினை. விடுதலைப் போராட்டங்களில் பெண்கள் பலர் குதித்தாலும் பெண்கள் நிலை உயரவில்லை. ஆண்கள் அதிகாரமே மேலேங்கி நிற்கின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளியேறுபவர்களில் 62% மானவர்கள் பெண்கள். இவர்களால் எமது சமூகத்தின் மாற்றங்களை எட்டிப் பிடிக்க முடிந்ததா? பெண்கள் சமூகத்தைத் தட்டியெழுப்பக் கூடிய வகையில் சிந்திக்க வேண்டும். சொந்த மண்ணில் பெண்கள் வாழ்வு மலர நாம் நிச்சயமாக விடுபட்ட வாழ்வுக் கலாசாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப விரைவோம்.

No comments:

Post a Comment