வவுனியாவில் மகளிர் அபிவிருத்தி நிலையம் நடாத்திய சர்வ தேச மகளிர் தின நிகழ்வுகள் - மார்ச் 8 2015
மகளிர் அபிவிருத்தி நிலையம் பெண்களுக்கான செயற்பாடுகளை நடாத்தி வரும் ஓர் தேசிய நிறுவனமாகச் செயற்பட்டு வருகின்றது. பெண்கள் வலுவூட்டல் தொடர்பான பலவித செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. எமது நிறுவனம் சர்வதேச மகளிர் தினத்தை ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் நடாத்தி, அவ்வப் பிரதேச மக்களை, பெண்கள் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுத்தி வருகின்றது. இந்த வகையில் 2015 மார்ச் 8ல், வவுனியா மாவட்டத்தில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் 150 பேர் பங்குபற்றினர். இவர்களில் பலர் இடம் பெயர்ந்த மக்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்ற ரீதியில் உள்ளடங்குவர்.
மகளிர் தின நிகழ்வில் தலைமை தாங்கிய எமது நிலையப் பணிப்பாளர் சரோஜா சிவச்சந்திரன், பெண்கள் எதையும் சாதிக்க முடியும் என்ற தலைப்பில் கருத்துக்களை கூறுகையில், இஸ்ரேலிய படத் தயாரிப்பாளரான டெஸ்லி பிபிசி க்காக தயாரித்த 'இந்திய மகள்'; என்ற ஆவணப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த போதிலும் யூரியூப் மூலம் எல்லோருக்கும் பரவலாக்கப்பட்டது. இவ் ஆவணப்படத்தில் பஸ் சாரதியான முகேஸ் சிங், சோபா என்ற பெண் பலாத்காரத்தின் போது ஒத்துழைத்திருந்தால் அவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்ற கூற்று பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்களுக்கு சவாலாக அமைந்துவிட்டது. இந்தியா சகிப்புத் தன்மையற்ற ஜனநாயக நாடாக இருந்த போதிலும் பெண் தொடர்பான பிரச்சனைகளில் சரியான முடிவுகளை எடுப்பதில் பின்தங்கி நிற்கின்றது. இவ்வாறான பிரச்சனைகளே ஐ.நா பதவிகளுக்கு போட்டியிடும் இக்காலகட்டத்தில் துரதிஸ்ட வசமான சம்பவங்களுக்கும் இடங்கொடுக்கின்றது. பெண் சிசுக் கொலை, பாலியல் துஸ்பிரயோகம், பெண் கடத்தல், வேலைத்தள பாலியல் துஸ்பிரயோகம், பெண்களுக்கான சட்ட ரீதியான உதவிகளில் தாமதம் போன்ற விடயங்கள் இன்றும் பாரபட்சப்படுத்தப்படுகின்றது. ஆகவே பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்து அரசியல் ஈடுபாடு காட்டி தமது பிரச்சகைளை வெளி உலகிற்கு கொண்டு வந்து தீர்க்க கூடிய சாமர்த்தியசாலிகளாக வளர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கிராம முகாமைத்துவத்திற்கான நிறுவனங்களின் சம்மேளனத்தின் (குசைஅ) ஆலோசகர் திரு எஸ். நாதன் அவர்கள,; பெண்கள் விழிப்படைய வேண்டும் என்ற தேவையை முன் வைத்து உரையாற்றினார். சட்டத்தில் பெண்கள் எதிர் கொண்டு வரும் வன்முறைப் பிரச்சனைகளுக்கு சில முன் உதாரணங்களை காட்டி உரையாற்றினார். வவுனியா மாவட்ட செயவகத்தில், சிறுவர் உளவள ஆலோசகராகப் பணி புரியும் திரு அம்பிகைபாகன் பெண்கள், சிறுவர் உளவளம் தொடாடர்பாக உரையாற்றினார். இதைத் தொடர்ந்து இந்நிகழ்வில் பங்குபற்றிய கிராம மட்ட பெண்கள் குழுத் தலைவிகளின் செயற்படுத்தலின் கீழ் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இறுதியாக நிலையப் பணிப்பாளர் சரோஜா சிவசந்திரன், அங்கு வருகை தந்திருந்த பெண்களை எழுந்து நிற்குமாறு கூறி, 'பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிப்பதில் ஒன்றுபட்டுச் செயற்படுவோம்' என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு நிகழ்வுகள் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment